சென்னை மாவட்டம் செங்குன்றத்தில் உள்ள தண்டல்கழனி விஜயா நகரில் ரூபன்பால் என்பவர் சொந்தமாக போதை மீட்பு மையம் நடத்தி வருகிறார். இந்த மையத்தில் 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த வம்சி என்பவர் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த மையத்தில் ஆவடியை அடுத்த பட்டாபிராம் வயலாநல்லூரைச் சேர்ந்த பென்னிஹின்(22), கும்மிடிப்பூண்டியை அடுத்த பல்லாகுப்பத்தைச் சேர்ந்த தேவராஜ் (19), செங்குன்றத்தை அடுத்த அம்பேத்கர் நகரைச்சேர்ந்த யாசின் ஷரீப்(36), சென்னை வியாசர்பாடி கக்கன்ஜி காலனியை சேர்ந்த கேசவன்(19) ஆகிய 4 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் அவர்கள் 4 பேருக்கும் வம்சிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவது வழக்கம். அதனை போல நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த 4 பேரும் இரும்பு கம்பியால் வம்சியை சரமாரியாக அடித்து கொலை செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த செங்குன்றம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வந்து உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து பென்னி ஹின், தேவராஜ், யாசின் ஷரிப் மற்றும் கேசவன் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.