தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து, அந்தமான் அருகே வங்க கடலில் நவம்பர் 30-ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஒரு சில வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். தொடர் கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மேலும் தமிழகத்தில் கனமழை நவம்பர் 30ஆம் தேதிவரை நீடிக்கும் என எச்சரித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், தஞ்சை, கரூர், திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, நீலகிரி, குமரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என கூறியுள்ளது.