மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலி மூலம் மன் கி பாத் நிகழ்ச்சி வாயிலாக பொதுமக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதன்படி 83-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது, பல்வேறு கடலோரப் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது என்பது நமக்கு தெரியும். இதையடுத்து தூத்துக்குடியில் பல சிறிய தீவுகள் மற்றும் திட்டுகளும் இதுபோன்ற அபாயம் உள்ளது. இந்த இயற்கை பேரிடர் அபாயத்திலிருந்து இயற்கை வழியிலேயே தப்பிப்பதற்கான வழிகளை அந்த பகுதியில் உள்ள மக்கள் மற்றும் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
எனவே தூத்துக்குடி மக்கள் தீவுகள் மற்றும் திட்டுகளில் பனை மரங்களை நடுகின்றனர். அந்தப் பனை மரங்கள் புயல், சூறாவளி காலக்கட்டத்தில் உறுதியுடன் நிற்கின்றன. அதனால் இந்தப் பகுதியை பாதுகாப்பதற்கான புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. மேலும் இயற்கையின் சமநிலையை சீர்குலைக்கும் போது அல்லது அதன் புனிதத்தை அழிக்கும்போது தான் இயற்கை நமக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. இயற்கை நம்மை ஒரு தாயைப் போல் வளர்த்து நம் உலகத்தை பிரகாசமான வண்ணங்களால் நிரப்புகிறது. என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.