தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9-12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த நவம்பர் 1ஆம் தேதி முதல் 1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக நீண்ட நாட்களும் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது தொடர் மழையின் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டு வருவதால் மீண்டும் பாடத்திட்டம் குறைக்கப்படுமா என்று மாணவர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியது, கனமழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தாலும் பாடத்திட்டங்களை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டு கூடுதல் வகுப்புகள் வைத்து பாடத் திட்டங்கள் முழுமையாக நடத்தி முடிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.