டாஸ்மாக் கடைகளில் மது வாங்குவோர் தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என்று சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாற்றில் 12-ஆவது மெகா தடுப்பூசி முகாம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி அமைச்சர் மா. சுப்பிரமணியன், பொன்முடி ஆகியோர் துவக்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் உலக அளவில் உருமாறி, புதிய வகை வைரஸ் பரவி வரும் நிலையில் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வருபவர்களுக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட விமான நிலையங்களில் பரிசோதனையும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
பொதுவெளியில் கலந்து கொள்வோர் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டிருப்பது கட்டாயம் என்று கூறிய அமைச்சர், இது மதுபான கூடங்களுக்கும், டாஸ்மாக் கடைகளுக்கும் பொருந்தும் என்று தெரிவித்தார். எனவே டாஸ்மாக் கடைகளுக்கு மது வாங்க வருவோர் வருவோர் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்றும், அதனை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.