சீனாவிடம் கடன் வாங்கிய பாவத்திற்காக உகாண்டா அரசு சர்வதேச விமான நிலையத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
மிகவும் ஏழ்மையான நாடான உகாண்டா கடந்த 2015-ஆம் ஆண்டில் சீனாவின் எக்ஸிம் பொதுத்துறை வங்கியிடம் கடனாக ரூ.1,500 கோடியை வாங்கியுள்ளது. மேலும் 20 ஆண்டிற்குள் அந்த கடனை 2 சதவீதம் வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என்றும் கூடுதல் அவகாசமாக ஏழு ஆண்டுகள் வழங்கப்படும் என்ற விதிமுறையும் இருந்துள்ளது. அதேபோல் உகாண்டா அரசு அந்நாட்டில் உள்ள ஒரே ஒரு சர்வதேச விமான நிலையமான எண்டெபெ விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக தான் இந்த கடனை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
அதேசமயம் சீன அரசு உகாண்டா இந்த கடனை திருப்பி செலுத்த தவறினால் அந்நாட்டில் உள்ள அரசு சொத்துக்கள் அடமானமாக பெறப்படும் என்ற விதிமுறைகளை வகுத்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் எண்டெபெ விமான நிலையத்தை எந்த சர்வதேச பாதுகாப்பும் இல்லாமல் ஒப்படைக்க வேண்டும் என்ற விதிமுறையும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது உகாண்டா இந்த விஷயத்தில் எந்தவொரு சர்வதேச நாட்டினுடைய உதவியையும் பெறக்கூடாது என்று சீனா தெரிவித்துள்ளது. இந்த நிலையில் உகாண்டா நாடும் வேறுவழியில்லாமல் கடனைப் பெற்றுக் கொண்டதுடன் இந்த விதிமுறைகளை மாற்றவும் சீன அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
அந்த வகையில் பீஜிங்கிற்கு தனது குழுவை உகண்டா அனுப்பியுள்ளது. ஆனால் எதற்கும் மசியாத சீனா அதிகாரிகளை கண்ட உகாண்டா குழு தனது நாட்டிற்கு தோல்வியுடன் திரும்பிச் சென்றுள்ளது. இதனால் உகண்டா நாடு ஒரு பொருளாதாரமற்ற சூழலில் சீனாவிடம் தனது சர்வதேச விமான நிலையத்தை இழக்கும் அபாய நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உகாண்டாவின் நிதியமைச்சர் இந்த கடன் ஒப்பந்தத்தில் தவறு செய்துவிட்டதாக கூறி நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.