Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசின் அலட்சியத்தால் 17 பேர் உயிரிழப்பு – ஸ்டாலின் குற்றச்சாட்டு..!!

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் என்ற பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வீட்டின் சுற்றுசுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த சுவர் குறித்து பல முறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும், நடவடிக்கை எடுக்காமல் விட்டதே இத்தனை பேர் உயிரிழந்திருப்பதற்கு காரணம் என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கொதிக்கின்றனர்.

Image

இந்நிலையில், திமுக தலைவரும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று அப்பகுதியை ஆய்வு செய்தார். அப்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அவர் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘சுவர் பழுதடைந்துள்ளது குறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் பல முறை புகார் கொடுத்து இருக்கின்றனர். உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. அரசு, அமைச்சர்கள், அதிகாரிகளின் அலட்சியத்தால் 17 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்.

Image

இறந்தவர்களின் உடலை திருட்டுத்தனமாக பிரேத பரிசோதனை செய்து எரியூட்டி இருக்கின்றனர். உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி இருக்கின்றனர். பொதுமக்களும் போராட்டம் நடத்தி இருக்கின்றனர். போராடியவர்களை காவல் துறையினர் கண்மூடித்தனமாக தாக்கி இருக்கின்றனர். அதில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Image

காவலர்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 4 லட்சம் ரூபாய் இழப்பீடு போதுமானதல்ல. அதை அதிகப்படுத்த வேண்டும். அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதுடன், வீடும் கட்டித்தரவேண்டும். விபத்திற்கு காரணமானவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது வெட்கக்கேடானது. சம்பந்தபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’ என்று தெரிவித்தார்.

Categories

Tech |