பனியன் தொழிலாளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோல்டன் நகர் பகுதியில் முகமது ரபீக் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தஸ்லிமாபானு என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு முகமது அர்சத், ஆபிதா பானு என்ற 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த வருடம் தஸ்லிமா பானு ஒரு விபத்தில் இறந்துவிட்டார். இந்நிலையில் வீட்டில் இருந்த ரூ.2 லட்சம் பணம், 15 பவுன் நகை ஆகியவற்றை முகமது ரபீக் தனது மனைவியின் சகோதரியான அபிராமியிடம் நம்பிக்கையின் பேரில் கொடுத்து வைத்துள்ளார். தற்போது குழந்தைகளின் படிப்பிற்காக அந்த தொகையையும், நகையையும் திருப்பிக் கேட்டபோது அபிராமி அதனை திருப்பி தராமல் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதுகுறித்து முகமது ரபீக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து முகமது ரபீக் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஆனால் அங்குள்ள அதிகாரிகளும் இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் முகமது ரபீக் தனது 2 குழந்தைகளுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது முகமது ரபீக் திடீரென தனது பையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தன் உடல் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் முகமது ரபீக்கிடமிருந்து பெட்ரோல் கேனை வாங்கி தண்ணீரை ஊற்றினர். அதன் பின் முகமது ரபீக்கிடம் விசாரணை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்து சென்றனர்.