குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய டிரைவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கள்ளிபாளையம் பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மோட்டார் சைக்கிளில் கள்ளிபாளையத்திலிருந்து பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஆலுத்துப்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த தனியார் பனியன் கம்பெனி வேன் ஒன்று அருண்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறியதில் மோட்டார் சைக்கிளுடன் அருண்குமார் கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைப் பார்த்த அந்த வழியே சென்றவர்கள் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வேனை சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு சென்று பிடித்து பல்லடம் பனப்பாளையத்தில் மடக்கிப் பிடித்தனர்.
இதனையடுத்து வேனின் கதவை திறந்தபோது டிரைவர் குடிபோதையில் இருந்தது அவர்களுக்கு தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் டிரைவருக்கு தர்ம அடி கொடுத்து இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் டிரைவர் தஞ்சாவூர் அப்பகுதியில் வசிக்கும் ராகவன் என்பதும் இவர் சின்னக்கரை பகுதியில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.