மின்வேலியில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள சாத்தங்குடி பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கருப்பசாமி தனது வீட்டில் வளர்க்கும் மாடுகளுக்கு தீவனம் பறிப்பதற்காக தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது மக்காச்சோளத்தை காட்டு பன்றிகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக விவசாயி ஒருவர் அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி கருப்பசாமி மயங்கி கீழே விழுந்து விட்டார்.
இதனை அடுத்து நீண்ட நேரமாகியும் கருப்பசாமி வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது மின் வேலிக்கு அருகில் கருப்பசாமி மயங்கி கிடந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உடனடியாக கருப்பசாமியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கருப்பசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மின்வேலி அமைத்த விவசாயியை கைது செய்ய வலியுறுத்தி கருப்பசாமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன் பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.