ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த சேது எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜின் மீது மரம் முறிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து நேற்று முன்தினம் சேது எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு ராமேஸ்வரத்திற்கு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரத்திற்கு வந்தடைந்த ரயில் அதிகாலை 3.45 மணியளவில் ராமேஸ்வரம் நோக்கி புறப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த ரயில் ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை -பெருங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த நிலையில் அப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளது.
அப்போது உச்சிப்புளி தண்டவாளம் அருகே இருந்த பெரிய புளியமரம் ஒன்று பலத்த காற்றில் முறிந்து எதிர்பாராதவிதமாக ரயிலின் என்ஜின் மீது விழுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த என்ஜின் டிரைவர் உடனடியாக ரயிலின் வேகத்தை குறைத்து ரயிலை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் டிரைவரின் சாமர்த்தியமான இந்த செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் அதிஷ்டவசமாக டிரைவர் மற்றும் பயணிகள் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து விரைந்து சென்ற ரயில்வே ஊழியர்கள் என்ஜின் மீது விழுந்த மரத்தை வெட்டி அகற்றி உள்ளனர். இதனால் ரயில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெரியகுளம் பகுதியில் நின்றுள்ளது. இதற்குப்பின் ராமேஸ்வரத்தில் இருந்து மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு அதன் மூலம் ரயில் ராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.