தமிழகத்தில் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் ஆன்லைன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். மேலும் பாடத்திட்டங்களை குறைப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தொடர் மழை காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் கனமழை காரணமாக மின்தடை ஏற்படுவதால் ஆன்லைன் வகுப்பிலும் மாணவர்கள் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக அரசு ஏற்கனவே முடிவு செய்தது போல ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் பருவ தேர்வுகள் நடத்தப்படும். அதுவரை எவ்வளவு பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலமாக தெரிந்து கொண்டு அதன்பிறகு பொதுத்தேர்வு குறித்து முடிவு எடுக்கப்படும். பாடத்திட்டங்கள் குறைப்பதற்கு வாய்ப்பில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.