Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எனது மகன் உயிரோடு இருக்கிறானா…? சிரமப்படும் குடும்பத்தினர்…. சப்-கலெக்டரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்த மகனை மீட்டு கொடுக்க வேண்டும் என குடும்பத்தினர் சப்-கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவராஜிடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் அங்கலக்குறிச்சி புது காலனி பகுதியில் வசிக்கும் அர்ஜூனன் என்பவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சப்-கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் எனக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர்.

எனது மகன் சந்தோஷ்குமார் கோவை அரசு கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது பாதியிலேயே படிப்பை நிறுத்தி விட்டான். கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் சந்தோஷ் குமாரை காணவில்லை. எங்களது வீட்டிற்கு பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, கோவை உக்கடம் மற்றும் மதுரையை சேர்ந்தவர்கள் என பலர் வந்தனர். அவர்கள் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது எங்களுக்கு தெரியவில்லை.

அவர்கள் சந்தோஷ்குமாரின் மூளையை சலவை செய்து ஆயுதப்புரட்சிக்கு கொண்டுபோய் சேர்த்துவிட்டனர். எனக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் எனது மனைவியின் வருமானத்தை வைத்து வாழ்ந்து வருகிறோம். தற்போது எனது மகன் உயிருடன் இருக்கிறானா என்பது குறித்து தெரியவில்லை. எனவே மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்த எனது மகனை மீட்டு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என அர்ஜூனன் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |