சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை குறைந்த நிலையில், தற்போது கத்தரிக்காய் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தொடர்ந்து தமிழ்நாட்டில் பெய்து வந்ததால் தற்போது, கத்தரிக்காய் விலை கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் கத்திரிக்காய் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் மழையால் தமிழகம் முழுவதும் கத்தரிக்காய் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் வரத்து குறைந்து இருப்பதால், விலை அதிகரித்து காணப்படுகிறது.
அதன்படி தற்போது கோயம்பேட்டில் கத்தரிக்காய் விலை கிலோ 70 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை வாங்கி செல்லும் சில்லரை வியாபாரிகள், கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இது தவிர புடலங்காய், பீர்க்கங்காய், வெண்டைக்காய், பாகற்காய் உள்ளிட்ட காய்களின் விலையும் கடுமையாக உயர்ந்து கிலோ 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
தொடர் மழை காரணமாக காய்கறி தோட்டங்கள் தண்ணீரில் மூழ்கியதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால், தட்டுப்பாடு நீங்கி காய்கறிகளின் விலை கட்டுக்குள் வர இன்னும் 10 நாட்களுக்கு மேல் ஆகும் எனவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.