Categories
மாநில செய்திகள்

“மீனவர்கள் பாதுகாப்பாக கரை திரும்ப ஏற்பாடு” – அமைச்சர் ஜெயக்குமார் உறுதி!

மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பாக கரை திரும்ப தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரப் புயலாக மாறக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வங்காள விரிகுடா மற்றும் குமரிக்கடற்கரைப் பகுதிகளில் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும்; ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் பாதுகாப்பாக கரை திரும்ப தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் விரைவில் திரும்ப வேண்டும் என்பதற்காக கோவா, மும்பை, கொச்சின் இந்திய கப்பற்படையினரிடமும் கடலோர காவல்படையினரிடமும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்தியக் கடலோர காவல்படையின் சமுத்திர பிரகாரி, டொவாடா, நவ்தேனு, நியூ என்டர்பிரைஸ் ஆகிய கப்பல்கள் மீன்பிடிப் படகுகள் இருக்கும் இடத்திற்கு விரைந்து சென்று, ஆபத்திலிருந்த 22 விசைப்படகுகளிலிருந்து 220 மீனவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வருகின்றனர்.

மேலும், மேற்கண்ட 22 படகுகளையும் பத்திரமாக மீட்டு, பாதுகாப்பாக அருகிலுள்ள கரைக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுத்திட கடலோர காவல் படையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.மேலும் மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பாக கரை திரும்ப தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |