மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ திமுகவைப் பொறுத்தவரையில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இல்லை. அதன் விளைவாக அதனுடைய தோழமை கட்சிகளையும் தற்போது தூண்டிவிட்டு பல்வேறு வழக்குகளைப் போட்டு வருகின்றது.
புதிய மாவட்டங்கள் பிரித்தாலும் அதிலுள்ள பஞ்சாயத்துகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்ற சட்டம் இருந்து வருகிறது. அவர்கள் கூறிவரும் வாதங்கள் அனைத்தும் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இல்லை என்பதாகத்தான் இருக்கிறது.
திமுகவைப் பொறுத்தவரையில் ஸ்டாலினை நம்பி, அந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மக்களைச் சந்தித்து வாக்கு கேட்க முடியாது. கருணாநிதியின் மகனுக்கு எந்தவிதத் தகுதியும் இல்லை. அவர் மகன் என்ற அடிப்படையில் தலைமைப் பொறுப்புக்கு வந்ததினால் அவருக்கு எவ்வாறு அரசியல் இயக்கங்களை நடத்துவது, மற்றவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பதுகூட தெரியவில்லை.
ஸ்டாலின் அனைவரையும் ஒருமையில் பேசி வருகிறார். மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஆளுமைத் திறன் அதிகம் மிக்க அரசியல்வாதி தமிழ்நாட்டில் இருப்பார் என்றால், அவர் வைகோ தான். எனவே, அவருடைய அரசியல் தலைமைக்கு வாழ்த்து கூறுவதற்கு கடமைப்பட்டுள்ளேன்’ என்றார்.