தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் நலன் கருதி பல்வேறு கல்வி உதவித்தொகைத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இது நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்து பெற வேண்டும் என்ற எண்ணத்தையும் மாணவர்கள் மனதில் விதைக்கிறது. இந்நிலையில் தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள அரசாணையில், மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான பெற்றோரின் ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
இதனை போல தமிழகத்தில் பள்ளி படிப்பு மற்றும் பள்ளி மேற்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்ட (BC) , மிகவும் பிற்படுத்தப்பட்ட (MBC) மற்றும் சீர்மரபினர் இன மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு கல்வி உதவித்தொகைத் திட்டங்களுக்கான பெற்றோரின் ஆண்டு வருமான உச்சவரம்பு 2.50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக மாணவ மாணவியருக்கு கூடுதலாக கல்வி உதவித்தொகை கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் பள்ளி மேற்படிப்பு பயிலும் மாணவ மாணவிகளின் சதவீதம் உயரும். தமிழக அரசின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.