சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் மரணம் குறித்து மனித உரிமை ஆணையம் விசாரிக்க உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கடந்த 2016ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய து. இந்த கொலை வழக்கில் நெல்லையை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். இவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்த சில வாரங்களில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.
இதையடுத்து ராம்குமார் மரணம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தது. பின்னர் ராம்குமாரின் உடலில் நடத்தப்பட்ட பரிசோதனையின் போது அவர் மின்சாரம் பாய்ந்து இறந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. இந்த அறிக்கையை மனித உரிமை ஆணையம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது . இந்நிலையில் சிறை கண்காணிப்பாளராக இருந்த அன்பழகன் சுவாதி கொலை வழக்கை மனித உரிமை ஆணையம் விசாரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் மனித உரிமை ஆணையம் இந்த வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.