சிறுவன் தொண்டையில் சிக்கியிருந்த நாணயத்தை மருத்துவர்கள் நவீன கருவியின் மூலமாக வெளியே எடுத்தனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள வீரப்பநாய்க்கன்ப்பட்டியில் முனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயஸ்ரீ என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் ரிஷ்வந்த் என்ற மகன் இருக்கிறார். இதில் சிறுவன் ரிஷ்வந்த் தனது தாயாரிடம் 5 ரூபாய் வாங்கி கொண்டு கடைக்கு சென்றார். இந்நிலையில் சிறுவன் வாயில் வைத்து இருந்த 5 ரூபாய் நாணயத்தை விழுங்கி விட்டார். இதுகுறித்து சிறுவன் தனது தாயாரிடம் கூறினார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த அவர் உறவினர்களின் உதவியுடன் சிறுவன் ரிஷ்வந்த்தை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். இதனையடுத்து டாக்டர் அருண் தலைமையில் மருத்துவ குழுவினர் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
அப்போது முதலில் சிறுவனுக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது அவர் தொண்டையில் நாணயம் சிக்கி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதனைத்தொடர்ந்து மருத்துவ குழுவினர் சிறுவனுக்கு மயக்க மருந்து கொடுத்து லரிங்கோ ஸ்கோப் என்ற நவீன கருவியின் மூலமாக தொண்டையில் உள்ள 5 ரூபாயை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்பின் 5 நிமிடத்தில் சிறுவனுடைய தொண்டை குழியில் சிக்கியிருந்த அந்த நாணயத்தை மருத்துவக் குழுவினர் அகற்றினர். இதனால் சிறுவனின் பெற்றோர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இவ்வாறு விரைவாக செயல்பட்டு சிறுவன் தொண்டையில் இருந்து நாணயத்தை வெளியே எடுத்த மருத்துவ குழுவினருக்கு பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.