கிரேக்க நாட்டில் முதியவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள மறுத்தால், அவர்களுக்கு மாதந்தோறும் அபராதம் விதிக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்திருக்கிறார்.
கிரேக்க நாட்டில் பெரியவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுத்தால், ஒவ்வொரு மாதமும் அவர்கள் 100 யூரோக்கள் அபராதம் செலுத்த வேண்டும். அதாவது, அந்நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. புதிய கொரோனா மாறுபாடு பரவி வருவதாலும், பனிக்காலம் நெருங்குவதாலும், அந்நாட்டு அரசு இவ்வாறு அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது.
நாட்டின் பிரதமர் Kyriakos Mitsotakis கூறுகையில், இந்த அபராதம் ஆரோக்கிய வாழ்விற்காக நாம் செலுத்தும் கட்டணம் என்று எடுத்துக்கொள்ளுங்கள், நாம் அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே தான் தடுப்பூசி கட்டாயமாக செலுத்தப்படுகிறது என்று கூறியிருக்கிறார்.
அதன்படி, நாட்டில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட மக்கள் அனைவரும், வரும் ஜனவரி மாதம் 16ஆம் தேதிக்குள் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ள பதிவு செய்துவிட வேண்டும். இல்லையெனில், அவர்கள் மாதந்தோறும் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிரேக்க அரசு, தடுப்பூசியை கட்டாயமாக்கினால், ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதை தவிர்க்கலாம் என்று கருதுகிறது. எனினும், இது அதிக அபராதம் என்றும் முதியவர்களுக்கு ஓய்வூதியமே 730 யூரோக்கள் தான் என்றும் சிலர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.