சைக்கிளில் சென்ற பள்ளி மாணவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதியம்புத்தூர் பகுதியில் பாலகணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 7-ஆம் வகுப்பு படிக்கும் மகேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். நேற்று கனமழை காரணமாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மகேஸ்வரனும் அவரது 2 நண்பர்களும் சேர்ந்து ஒரே சைக்கிளில் ஒட்டப்பிடாரத்தில் உள்ள தனது நண்பரை பார்க்க சென்றுள்ளனர். அப்போது ஒட்டப்பிடாரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென மகேஸ்வரன் தன் சைக்கிளில் இருந்து இறங்கி கீழே விழுந்துள்ளார். இந்நிலையில் சிறிது நேரம் மகேஸ்வரன் கை கால்களை உதறி விட்டு மயங்கினார்.
இதனைப் பார்த்த உடன் இருந்த நண்பர்கள் அருகில் இருந்தவர்களிடம் தண்ணீர் வாங்கி முகத்தில் தெளித்துள்ளனர். ஆனால் அவரது மயக்கம் தெரியவில்லை. இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் மகேஸ்வரனை உடனடியாக மீட்டு ஒட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் மகேஸ்வரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மகேஸ்வரனின் பெற்றோர், உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதுள்ளனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மகேஸ்வரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த புதியம்புத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.