கணவரை கண்டித்து பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள வெள்ளரி வெள்ளி கிராமம் கள்ளப்பாளையம் பகுதியில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளிபாளையம் அரசு போக்குவரத்து கழக பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜீவா என்ற மனைவி இருக்கிறார். இதில் ஜீவா தையல் தொழில் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனிடையில் மனைவி ஜீவாவிடம் குடும்ப செலவுக்கு வெங்கடாசலம் தனது சம்பள பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூட கொடுத்தது இல்லை என்று தெரிகிறது. இதுகுறித்து ஜீவா சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடிவு செய்தார்.
இதற்காக ஜீவா மணெண்ணெய் கேனுடன் சங்ககிரிக்கு புறப்பட்டு வந்தார். அதன்பின் ஜீவா திருச்செங்கோடு பிரிவு சாலையில் நடந்து வந்தபோது திடீரென தன் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றினார். அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் ஓடிவந்து அந்தப் பெண்ணிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை கைப்பற்றினர். இதனைத்தொடர்ந்து அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதாவிடம், ஜீவா அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது “என் கணவர் வெங்கடாசலம் இதுவரை சம்பள பணத்தை எனக்கு கொடுப்பது இல்லை.
மேலும் நான் தங்கியுள்ள வீட்டை என் கணவர் அடிக்கடி பூட்டிவிட்டு சென்று விடுகிறார். அதுமட்டுமின்றி அவர் என்னை சமையல் செய்ய விடாமல் சிலிண்டரை எடுத்து மறைத்து வைத்து கொள்கிறார். எனினும் நான் தையல் தொழிலில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குழந்தைகளை காப்பாற்றி வந்தேன். இந்நிலையில் எனக்கு 2 கால் முட்டியும் தேய்ந்ததோடு, 2 கண்களும் தெரியவில்லை. ஆகவே என் கணவரை நீங்கள் அழைத்து விசாரணை நடத்தி எனக்கு வழிகாட்ட வேண்டும்” என்று அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின்படி ஜீவாவின் கணவர் வெங்கடாசலத்தை அழைத்து விசாரணை மேற்கொள்ள காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.