வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெடும்புலி புதுப்பேட்டை குறுக்கு தெருவில் திருநாவுக்கரசர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தரைப்பாலத்தில் வெள்ளம் செய்வதை வேடிக்கை பார்க்க சென்ற சரவணன் பாலத்தை கடக்க முயன்ற போது வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அப்போது அருகிலிருந்தவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தும் முடியாத காரணத்தினால் தீயணைப்பு துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவனை படகில் சென்று தேடும் பணியை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து 5 மணி நேரமாக தேடியும் மாணவனை கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது. இதனைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில் சுடுகாடு அருகாமையில் இருக்கும் ஆற்றின் கரையோரம் சரவணன் இறந்த நிலையில் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.