நாடு முழுவதும் தற்போது கொரோனா சற்று கட்டுக்குள் வந்த நிலையில் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மற்றும் சர்வதேச விமானங்களை இயக்க மத்திய அரசு கட்டுப்பாடுகளுடன் ஒப்பந்தம் போட்டது. தற்போது அந்த நாடுகளுக்கு மட்டும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் மத்திய உள்துறை, வெளியுறவுத்துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அடுத்த மாதம் 15 முதல் வழக்கமாக சர்வதேச விமான போக்குவரத்து சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில் தென்னாப்பிரிக்காவில் அதிக வீரியம் கொண்ட உருமாறிய புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது . இது ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருவதனால் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவிலும் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்குவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் வழக்கமான வர்த்தக விமான போக்குவரத்து சேவை தொடங்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.