கண்மாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடியிருப்பு முழுவதும் வெள்ளம்போல் நீர் சூழ்ந்து பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் சனவேலி ஊராட்சியில் கொசக்குடி கண்மாய் உள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் கண்மாய் நிரம்பி வழிகின்றது. இந்நிலையில் கண்மாய் உடைந்து தண்ணீர் வெளியேறினால் அப்பகுதியில் உள்ள மாரியாயிபட்டினம் குடியிருப்பு பகுதி நீர் சூழ்ந்து பாதிக்கப்பட ஆபத்து இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் ஆர்.எஸ். மங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டு கண்மாயின் மடைகளை திறந்துவிட உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அந்த நீர் சனவேலி கோட்டக்கரை ஆற்றுக்கு சீராக சென்று கொண்டிருந்துள்ளது. இதற்கிடையே சிலர் கண்மாயின் மடைகளை அடைத்ததால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் கண்மாய் உடைப்பு ஏற்பட்டு மாரியாயிபட்டணம் குடியிருப்பு முழுவதும் வெள்ளம்போல் நீர் சூழ்ந்து காட்சியளிகின்றது. இதனையறிந்த தாசில்தார் உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.