ராம்குமார் சிறை மரணம் தொடர்பான வழக்கை மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்துவதற்கு, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்கிற மின் பொறியாளர் 2016 ஆம் ஆண்டு அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சுவாதி படுகொலை தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம் குமார் என்கிற இளைஞரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்த ராம்குமார் அடுத்த சில வாரங்களில் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.
இந்த வழக்கு குறித்த விசாரணையை, மாநில மனித உரிமை ஆணையமும் நடத்தி வருகிறது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற சிறைத் துறை கண்காணிப்பாளர் அன்பழகன் தொடர்ந்த வழக்கில், சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் அங்கிருந்த மின்சார வயரை கடித்து தற்கொலைக்கு முயன்று பின்னர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
ராம்குமார் மரண வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அது தள்ளுபடி செய்யப்பட்டது எனவும், ஏற்கனவே இந்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரித்து வழக்கை முடித்து வைத்த நிலையில், மாநில மனித உரிமை ஆணையம் தன்னிச்சையாக வழக்கு தொடர்ந்து விசாரித்து வருவதால் இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கல்யாணசுந்தரம், சிவஞானம் அமர்வு மாநில மனித உரிமை ஆணையம் ராம்குமார் வழக்கை விசாரிப்பதற்கு இடைக்கால தடை விதித்து மனித உரிமை ஆணைய பதிவாளர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.