ஓ பன்னீர்செல்வம் வகித்து வரும் ஒருங்கிணைப்பாளர் பதவி மற்றும் எடப்பாடி பழனிச்சாமி வகித்து வரும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கவேண்டும் என்று கூறி தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு ஒன்றை அளித்துள்ளார். மேலும் அதிமுக சட்ட விதிகளில் பன்னீர்செல்வமும், எடப்பாடியும் கொண்டுவந்த திருத்தங்கள் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தெரிவித்ததாவது: “தேர்தல் நடைபெற்றபோது திமுக உள்பட மற்ற கட்சிகளில் நேர்காணல் நடத்தப்பட்டது.
ஆனால் அதிமுகவை பொறுத்தவரை எந்த நேர்காணலும் நடத்தப்படவில்லை. ஒரு சில மணி நேரங்கள் பொதுக்குழுவை மட்டும் கூட்டி விட்டு பிறகு அவர்களே முடிவு எடுத்து வேட்பாளர் பட்டியலை அறிவித்து கொண்டனர். ஆட்சிமன்ற குழுவில் கூட்டம் இல்லை. அதுதான் வேட்பாளர்களை முடிவு செய்ய வேண்டும். அவர்களுடன் கலந்து பேசி ஆலோசனை செய்ய வேண்டும். ஆனால் அதிமுகவில் அது நடக்கவே இல்லை. சட்டமன்ற தேர்தலில் ரூபாய் 20 கோடிக்கு மேல் பணம் வசூலிக்கப்பட்டது. விருப்ப மனு அளித்தவர்கள் ஒருவரைக்கூட நேர்காணல் என்பதை செய்யாமல் இருவர் மட்டும் வேட்பாளர்களை அறிவித்துக் கொள்கின்றனர். அவர்கள் எடுக்கின்ற முடிவை மட்டும் நடைமுறைப் படுத்துகின்றனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.