மோட்டார் சைக்கிள் மீது மினி பஸ் மோதிய விபத்தில் போட்டோகிராபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள முனிசிபல்காலனியில் மதிவாணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கரண்குமார் என்ற மகன் இருந்தார். இவர் தனியார் ஸ்டூடியோவில் போட்டோகிராபராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து நாச்சியப்பா வீதி வழியாக சவிதா சிக்னல் நோக்கி கரண்குமார் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து சவிதா சிக்னலுக்கு அருகில் பாரதிவீதியில் சென்றபோது பின்னால் வந்து கொண்டிருந்த மினி பஸ் எதிர்பாராதவிதமாக கரண்குமார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
மேலும் கீழே விழுந்த கரண்குமார் மீது மினி பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இதனால் சம்பவ இடத்திலேயே கரண்குமார் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரண்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.