தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழை பயிற்று மொழியாக்க கோரி மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துகுடி மாவட்டம், கடம்பூர் சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் மத்திய அரசு இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிக்கு முக்கியத்துவம் அளித்து, அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இருபது மொழிகளையும் புறக்கணிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்திருந்தார். மேலும் தமிழகத்தில் 59 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கி வரும் நிலையில் அந்த பள்ளிகளில் மாநில மொழிகள் பயிற்று மொழிகளாக இல்லை.
சமஸ்கிருதப் பாடத்தைக் கட்டாயமாக்கி, ஹிந்தி மொழியில் பயிற்றுவிப்பது நடைமுறையில் உள்ளது. எனவே தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழை கட்டாயப் பாடமாகவும், பயிற்று மொழியாகவும் உத்தரவிட வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை பயிற்று மொழியாக கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.