உருமாறிய புதிய வைரஸ்-ஆன ஒமைக்ரான் கண்டறிவதற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகள் ஆய்வகங்களில் தயார் நிலையில் இருப்பதாக மருத்துவ துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மருத்துவத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், ஒமைக்ரான் பரவினால் அதற்கு சிகிச்சை அளிப்பதற்கு அனைத்து மருத்துவமனைகளும் தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும் இதற்கான டெக்-பாத் 3.5 லட்சத்திற்கு மேல் கையிருப்பில் இருப்பதாக கூறியுள்ளார். பின்னர் கூடுதலாக 85,000 கிட்டுகள் வாங்குவதற்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் ஏற்பாடு செய்து வருகிறார். தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் பரவியுள்ள வைரஸின் வீரியம் குறைந்ததாக தகவல் வந்துள்ளது. இந்த நிலையில் ஜெனிவாவில் உள்ள WHO அதிகாரிகள் பேசுகையில், இப்போது எந்த முடிவும் எடுக்க முடியாது.
ஒமைக்ரான் வேகமாக பரவி வருகின்ற நிலையில், வைரஸின் வீரியம் குறித்து சில நாட்களுக்குப் பின்னர் தெரிய வரும். தொடர்ந்து தொண்டை வலி உடல் சோர்வு போன்றவை இதன் அறிகுறிகளாக தெரிவிக்கப்பட்டுள்ளன. WHO மற்றும் மத்திய அரசின் வல்லுநர்களின் கருத்தின் அடிப்படையில் உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மருத்துவத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.