கால்நடைகள் சாலையில் சுற்றி திரிந்தால் உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டனூர் பேரூராட்சி செயல் அலுவலர் உமா மகேஸ்வரன் செய்தி குறிப்பில் கூறியதாவது, பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான மாடுகளை வீடுகளிலேயே கட்டி வைத்து பராமரிக்க வேண்டும். இந்த மாடுகள் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக சாலைகளில் சுற்றி திரிந்தால் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் பாதுகாப்பாக அடைத்து வைக்கப்படும். மேலும் உரிமையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதோடு, கால்நடைகளை பராமரிப்பதற்கு கட்டணமாக நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் வசூல் செய்யப்படும்.
இந்நிலையில் உரிமையாளர்கள் 7 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்திவிட்டு கால்நடைகளை வீட்டிற்கு ஓட்டி செல்லலாம். இதனையும் மீறி அபராதம் செலுத்தாமல் இருந்தால் கால்நடைகள் ப்ளூ கிராஸ் சொசைட்டி அல்லது அருகில் இருக்கும் கோசாலையில் ஒப்படைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.