விஷம் குடித்து தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேல பூவாணத்தில் அருள்சாமி-சவுரியம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு சவரிசுரேஷ், ஆரோக்கிய செபஸ்டியான் ஆகிய 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் சவரிசுரேஷ் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையில் அருள்சாமி வீட்டில் பலகாரம் செய்து கடைகளில் விற்று வந்துள்ளார். இந்நிலையில் அருள்சாமி வீடு கட்டுவதற்காக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தனியார் வங்கியில் 8 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதனையடுத்து பலகாரம் விற்று வந்த வருமானத்தில் அருள்சாமி வங்கிக்கு தவணை தொகையை செலுத்தி வந்தார்.
அதன்பின் கொரோனா ஊரடங்கு மற்றும் மழையால் பலகாரம் செய்யும் தொழில் பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக வங்கிக்கு தவணை தொகையை செலுத்த முடியாமல் அருள்சாமி மற்றும் அவரது மனைவி சவுரியம்மாள் இருவரும் மனமுடைந்து காணப்பட்டனர். இந்த நிலையில் அருள்சாமியும், சவுரியம்மாளும் விஷம் குடித்து தற்கொலை செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தம்பதியினரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.