ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் கடந்த 10 நாள்களுக்கு முன்பு நான்கு பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்டார். தடயங்கள் எதுவும் காவலர்களுக்கு சிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் குற்றவாளிகள் அவரது உடலின் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தினர்.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் குற்றவாளிகள் நான்கு பேரும் இன்று அதிகாலை காவல் துறையினரால் என்கவுன்டர் செய்யப்பட்டனர்.
இதனால் பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவில் ஹைதராபாத் காவல் துறையினர் நனைந்தவருகின்றனர். இந்த என்கவுன்டர் நடவடிக்கையை துணிச்சலுடன் தலைமையேற்று நடத்திய எஸ்.பி. சஜ்ஜானார் அம்மாநில மக்கள் கொண்டாடும் உண்மையான கதாநாயகனாக மாறிவிட்டார்.
எஸ்.பி. சஜ்ஜானார், சக காவல் துறையினருக்கு ஆதரவாக, ‘ஜெய் போலீஸ், ஜெய் ஜெய் போலீஸ் ( #Jai Police! #Jai Jai Police) மற்றும் சாஹோ சஜ்ஜானார் (#Saaho Sajjanar)’ உள்ளிட்ட ஹேஸ்டேக்குகள் பிரபலம் அடைந்துவருகின்றன. இதுமட்டுமின்றி சஜ்ஜானாரை இணையவாசி ஒருவர், நிஜ வாழ்வில் சிங்கம் எனப் பாராட்டியுள்ளார்.
பெண் ஒருவர் கூறும்போது, “காவல் துறையினர் அளித்த வாக்குறுதிப்படி குற்றவாளிகளுக்கு உடனடி தண்டனை கிடைத்துள்ளது” என்றார். காவல் துறையினரின் என்கவுன்டர் நடவடிக்கையை தெலங்கானா மக்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், சினிமா நட்சத்திரங்கள் என அனைவரும் கொண்டாடிவருகின்றனர்.
குற்றவாளிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்து, சமூக நீதியை காப்பதில் எஸ்.பி. சஜ்ஜானார் கெட்டிக்காரர். சஜ்ஜானார் வாராங்கலில் எஸ்.பி.யாக இருந்த காலக்கட்டத்தில் (2008) பெண் மீது திராவகம் வீசி தாக்குதல் நடத்திய சமூகவிரோதிகள் சீனிவாஸ், ஹரி கிருஷ்ணா, சஞ்சய் உள்ளிட்டவர்கள் என்கவுன்டரில் சுட்டுத் தள்ளப்பட்டனர்.
நக்ஸலைட்டுகளுக்கு எதிராகவும் இவர் கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளார். தெலங்கானா மாநில காவல் துறையில் நுண்ணறிவுப் பிரிவிலும் பணிபுரிந்துள்ளார். இவர் 1996ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். பிரிவில் பணிக்குச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.