கடந்த 10 நாள்களில் மட்டும் வெங்காயத்தின் விலை சுமார் 150 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. சில்லரை சந்தையில் மட்டுமல்லாமல் மொத்த விற்பனையிலும் வெங்காய விலை ஏறியுள்ளது. இந்த விலையேற்றம் மேலும் ஏற்றத்தை சந்திக்கும் என்பதை காட்டுவதாக உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதிகளவில் வெங்காயத்தை பயன்படுத்தும் மாநிலமாகத் திகழும் தமிழ்நாட்டிலும் வெங்காய விலை கடும் ஏற்றத்தை சந்தித்துள்ளது. குறிப்பாக, சமையலில் தவிர்க்க முடியாததாக கருதப்படும் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 180 வரை விற்கப்படுகிறது.
இதேபோல ஆந்திரா, கொல்கத்தா ஆகிய பகுதிகளிலும் வெங்காயத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கொல்கத்தாவில் ஒரு கிலோ வெங்காயம் ரூபாய் 200க்கும் ஹைதராபாத்தில் ரூபாய் 150க்கும் விற்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தான், துருக்கி, எகிப்து ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யபடவிருக்கும் வெங்காயம் இந்தியா வர குறைந்தது மூன்று வாரங்கள் ஆகும் என்பதால் சாதாரண மனிதனுக்கு வெங்காயம் என்பது எட்டாக் கனியாக மாறிவருகிறது.