வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சாஸ்திரம்பாக்கம் கிராமத்தில் கோவிந்தசாமி-ராஜேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு யூட்டிகா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் யூட்டிகா தனது தோழிகளுடன் இணைந்து மழை நீர் வெளியேறுவதை வேடிக்கை பார்ப்பதற்காக சாஸ்திரம்பாக்கம் மதகு பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக யூட்டிகா வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுமியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதன் பின் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பனை மரத்தின் கீழ் உள்ள கல்லுக்கு இடையில் கிடந்த சிறுமியின் சடலத்தை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அதன்பிறகு காவல்துறையினர் சிறுமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.