மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு மழைநீரில் வழுக்கி விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
சென்னை மாவட்டத்திலுள்ள புரசைவாக்கம் பகுதியில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமாவதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இதில் வினோத்குமார் கொளத்தூரில் இருக்கும் விளம்பர நிறுவனத்தில் புகைப்பட கலைஞராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக ஹேமாவதி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதன்பிறகு பேச்சுவார்த்தை நடத்தி குடும்பத்தினர் இருவரையும் சேர்த்து வைத்துள்ளனர். இந்நிலையில் மழைநீரில் வழுக்கி விழுந்து ஹேமாவதி காயமடைந்ததாக கூறி வினோத்குமார் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு ஹேமாவை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதன் பின் ஹேமாவதியின் தந்தை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் வினோத்குமார் மீது புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வினோத்குமாரை கைது செய்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது பல பெண்களுடன் வினோத்குமாரை தொடர்புபடுத்தி பேசியதால் கோபத்தில் அவர் ஹேமாவதியின் கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்துள்ளது. அதன் பின் ஹேமாவதி மழைநீரில் வழுக்கி விழுந்து இறந்து விட்டதாக வினோத்குமார் நாடகமாடியுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.