பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டி பணம் பறித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் ரயில்வே கேட் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவர் தனது செல்போனில் பெண்களை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் அந்த நபரை பிடிக்க முயற்சி செய்த போது அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி “எனது அருகே யாராவது வந்தால் உங்களை சுட்டு விடுவேன்” என மிரட்டியுள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து விட்டனர். அதன்பின் அவரிடம் இருந்த 2 ஏர்கன் துப்பாக்கிகளையும், பென் டிரைவையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனையடுத்து அந்த நபரை காட்டூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது அவர் கோவை அவிநாசி ரோடு பகுதியில் வசிக்கும் சமீர் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் சமீர் அழகாக இருக்கும் பெண்களை தீவிரமாக கண்காணித்து செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். அதன் பிறகு சமீர் அந்த புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்துள்ளார்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட பெண்களை நேரில் சந்தித்து சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிடுவேன் என கூறி மிரட்டி பணம் கேட்டுள்ளார். இதற்கு பயந்து போன பெண்கள் சமீர் கேட்கும் பணத்தை கொடுத்துள்ளனர். இதனையடுத்து கொலை மிரட்டல், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சமீரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.