நாட்டு துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கரட்டுமேடு பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் நின்று கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் செல்வத்தை சுற்றி வளைத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் செல்வத்திடம் இருந்த நாட்டுத்துப்பாக்கி, வெடிமருந்து பொருட்கள் மற்றும் எக்ஸ்புளோசிவ் பேஸ்ட் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
அதன் பிறகு செல்வம் அளித்த தகவலின்படி காவல்துறையினர் மனோகரன் என்பவரது வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். அங்கிருந்த நான்கு வெடிகுண்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்வம் மற்றும் மனோகரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.