நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் தனிநபர் மசோதாவை மாநிலங்களவையில் திமுக எம்பி வில்சன் அறிமுகம் செய்தார்.
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் எனும் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் எல்லா மக்களும் நீட்தேர்வு சம வாய்ப்பு வழங்கவில்லை என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கிராமப்புற மற்றும் ஏழை மக்களின் மருத்துவ கனவை சிதைப்பதாக நீட்தேர்வு அமைந்துள்ளது என்று முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. அதுமட்டுமில்லாமல் இந்த ஆண்டு கொரோனா காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
மேலும் டெல்லிக்குச் சென்று முதல்வர் முக ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினார். இப்படி நீட் தேர்வை ரத்து செய்ய திமுக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் திமுக எம்பி வில்சன் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் தனிநபர் மசோதாவை அறிமுகம் செய்தார்.