தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸ் பரவி வருவதால் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
அதில், 1முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சுழற்சி முறை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் இந்த மாணவர்களுக்கு நேரடியாக அல்லது ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தலாம். அதனைதொடர்ந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் பள்ளி வளாகத்துக்குள் நுழையும் போது கட்டாயமாக வெப்பநிலை பரிசோதிக்கப்பட வேண்டும். இதில் அதிக வெப்பநிலை இருக்கும் நபர்கள் வளாகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எப்போதும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
பள்ளி வகுப்பறைகளில் தளவாட பொருட்கள், கைப்பிடிகள், கதவுகள் மற்றும் ஜன்னல்கள் ஆகியவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் கூட்டம் ஏற்படாமல் இருப்பதற்காக இறைவணக்கம், விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்ச்சியை தவிர்க்க வேண்டும். பள்ளிகளில் நீச்சல் குளங்கள் இருந்தால் அவற்றை உடனடியாக மூட வேண்டும். மேலும் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது. இந்த அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் அனைத்து பள்ளிகளும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.