தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வு 15 பேர் முறைகேடு செய்துள்ளனர் என ஒன்றிய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவை உறுப்பினர் சின்ராஜ் நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தமிழ்நாட்டில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது தொடர்பாக விவரங்களை கேட்டறிந்தார்.
இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள ஒன்றிய குடும்ப நலத்துறை அமைச்சகம், தேசிய தேர்வு முகமையின் அடிப்படையில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 15 பேர் முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த 15 பேரின் தேர்வு முடிவுகளும் ரத்து செய்யப்பட்டதாக ஒன்றிய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது. 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 4 பேரும் 2020-ஆம் ஆண்டு நீட் தேர்வில் 5 பேரும் முறைகேட்டில் ஈடுபட்டதாக மக்களவையில் ஒன்றிய குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரும் தனிநபர் சட்ட முன்வரைவு மாநிலங்களவையில் திமுக எம்பி வில்சன் அறிமுகம் செய்துள்ளார். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கான விலக்கை எப்பாடுபட்டாவது கொண்டுவந்து விடுவோம் என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. பிரதமருக்கு கடிதம் எழுதுவது உள்ளிட்டவற்றைக் மேற்கொண்டு வரக்கூடிய நிலையில், அதற்கான ஒரு முயற்சியாக திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், இந்த தனிநபர் சட்ட முன்வரைவை அறிமுகம் செய்தார்.
தனிநபர் சட்ட முன்வரைவு என்பது ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும், இருக்கக் கூடிய மிக முக்கியமான அதிகாரிகளில் ஒன்றாகும். இதன் மூலமாக நாட்டின் எந்த ஒரு பிரச்சினை குறித்தும் புதிய சட்டத்தையோ நல்லது சட்டத் திருத்தத்தை கொண்டு வருவதற்கான சட்ட முன்வரைவுகளையோ தாக்கல் செய்ய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.