மழைநீர் வடியும் பேருந்தில் நின்றவாறு மாணவ-மாணவிகள் பயணம் செய்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடியில் 100-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் இருக்கிறது. இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்கள் தினசரி அரசு பேருந்தில் சென்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கூடம் முடிந்து மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என 15 பேரை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து தாளவாடியில் இருந்து பெலத்தூருக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து புறப்பட்ட சில மணி நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது.
இதனால் பேருந்தின் மேற்பரப்பிலுள்ள துவாரம் வழியாக மழைநீர் ஒழுகி உட்கார்ந்திருந்த மாணவ-மாணவிகள் மற்றும் பயணிகள் மீது சொட்டு சொட்டாக விழுந்தது. இந்த நிலையில் அவர்கள் இருக்கையில் இருந்து எழுந்து மழைநீர் ஒழுகாத இடத்தில் நின்று பயணம் மேற்கொண்டனர். இதனை பேருந்தில் இருந்த ஒருவர் தனது செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.