வீடுகள் இல்லாத மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு இணைச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட இரு சக்கரம், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த தன்னார்வலர்களுக்கு நினைவு பரிசு வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கியுள்ளார். இதில் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. முன்னிலை வகித்துள்ளார்.
இந்நிலையில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் 35 நபர்களுக்கு 20,54,000 மதிப்புடைய இணைச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 33 மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் மற்றும் தன்னார்வலர்கள் 25 நபர்களுக்கு நினைவு பரிசு அவர் வழங்கியுள்ளார்.
இதனை அடுத்து மாற்றுத்திறனாளிகள் நல்ல நிலையில் இருக்கும் மற்றவர்களை காட்டிலும் தனிப்பட்ட திறமை கொண்டவர்கள் எனவும், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்கள் மிகவும் துன்பப்பட்டு குழந்தைகளை கவனித்து வருவதை கண்கூடாக பார்த்திருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். அதன்பின் மாற்றுத்திறனாளிகளின் கஷ்டங்களை போக்கும் வண்ணம் தமிழக முதலமைச்சர் அரசு உதவிகளை செய்து வருகின்றார். ஆதலால் மனம் தளராமல் இருங்கள், வீடுகள் அற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளின் குடும்பங்களுக்கு வீடு கட்டித்தர விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.