மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை பரப்பியதற்காக பிரேசில் அதிபர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் நாடு கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸை ஒரு சாதாரண காய்ச்சல் போல பாவித்து வரும் பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனரோ கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி குறித்தும் விமர்சனம் செய்துள்ளார். அதாவது சமூக வலைதளம் மூலம் கடந்த அக்டோபர் மாதம் கொரோனா தடுப்பூசி குறித்து பேசிய போல்சனரோ “எயிட்ஸ் நோய்கள் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி கொள்வதால் அதிகரிக்கலாம்” என்று கூறியுள்ளார்.
இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதோடு பிரேசில் நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் அதிபர் ஜெயீர் போல்சனரோவுக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டது. இந்நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் அதிபருக்கு எதிரான வழக்கு விசாரணை நடந்துள்ளது. அந்த விசாரணையின் போது சமூக வலைதளங்களில் கொரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை பரப்பியதற்காக அதிபர் மீது மேலும் ஒரு வழக்கை பதிவு செய்யுமாறு நீதிபதி அரசு வக்கீல்களிடம் அறிவுறுத்தியுள்ளார். மேலும் இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைப்பதாகவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.