முகநூலில் அறிமுகமாகி போலீஸ்காரர் உள்பட 2 பேரிடம் இளம்பெண் பல லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் கடலோர காவல்படையில் பாரதிராஜா என்பவர் கடந்த 3 மாதங்களாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் ஆவடி பகுதியில் வசிக்கும் ஐஸ்வர்யா என்ற பெண்ணுடன் முகநூலில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாரதிராஜாவிடம் வேறு ஒரு பெயரில் அறிமுகமான ஐஸ்வர்யா தான் மருத்துவம் படிப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து நான் உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என ஐஸ்வர்யா பாரதிராஜாவிடம் கூறியுள்ளார். அதன் பின் படிப்பு செலவுக்கு பணம் தேவை, திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் பணம் தேவை போன்ற பல்வேறு காரணங்களை கூறி ஐஸ்வர்யா பாரதிராஜாவிடம் இருந்து 14 லட்ச ரூபாய் வரை வாங்கியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து பாரதிராஜாவின் பெரியப்பா மகனான மகேந்திரன் என்பவருடன் வேறு ஒரு முகநூல் கணக்கு மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா ஆசை வார்த்தைகள் கூறி 20 லட்ச ரூபாய் வரை பணத்தை வாங்கி ஏமாற்றியுள்ளார். கடந்த ஒரு மாதமாக பாரதிராஜாவிடம் பேசுவதை ஐஸ்வர்யா நிறுத்திவிட்டார். இதனால் கோபமடைந்த பாரதிராஜா சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஆவடி குற்றப்பிரிவு காவல்துறையினர் ஐஸ்வர்யாவை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் பாரதிராஜா மற்றும் மகேந்திரன் ஆகிய இருவரிடமிருந்தும் 34 லட்ச ரூபாய் பணத்தை இளம்பெண் மோசடி செய்தது உறுதியானது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.