பள்ளியின் தாளாளர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பின்புறம் இருக்கும் வண்ணாரப்பேட்டையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் ஜேம்ஸ் என்பவர் தலைமை ஆசிரியராகவும், தாளாளராகவும் இருக்கிறார். இங்குள்ள விடுதியில் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் ஏழை, எளிய மாணவ மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். கடந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்ற மாணவிகள் சிலர் ஊருக்கு செல்ல முடியாமல் விடுதியிலேயே தங்கியுள்ளனர். இந்நிலையில் விடுதிக்கு சென்ற ஜேம்ஸ் தனியாக இருந்த 14 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதனையடுத்து தனது பாதுகாவலரின் வீட்டிற்கு சென்ற மாணவி நடந்தவற்றை தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜேம்சை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி ஜேம்ஸை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.