திட்டப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு தடையின்றி குடிநீர் வழங்கப்படும் என குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருப்பாற்கடல் ஊராட்சி பாலாற்றில் இருந்து சத்தியமங்கலம் உள்பட 11 கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 89 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கிட 5 நீர் உறிஞ்சி கிணறுகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து ஒவ்வொரு ஊராட்சி வழியாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள், நீரேற்று நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இத்திட்டத்தில் குழாய்கள் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் வி.தட்சிணாமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.
இந்நிலையில் திருப்பாற்கடல் ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு அவர் ஆய்வு செய்துள்ளார். இதனை அடுத்து கிராம நிர்வாக சேவை மையத்தில் பொதுமக்களிடம் வேளாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி கூறியதாவது, இம்மாவட்டத்தில் இருக்கும் 282 ஊராட்சிகளில் 2,04,000 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. தற்போது வரை 75 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு இருக்கின்றது.
அதன்பின் 1, 54,000 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு குழாய்கள் பதிக்கப்பட்டு இருக்கின்றது. இவற்றில் மீதமிருக்கும் 50,000 குடிநீர் இணைப்புகள் வருகின்ற 2022 மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். பின்னர் திருப்பாற்கடல் ஊராட்சியில் இப்பணிகள் 100% முடிவடைந்து இருப்பதாகவும், அடுத்த கட்டமாக சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கின்றது என தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் மகளிர் குழுக்களை சேர்ந்த ஐந்து பெண்களை தேர்வு செய்து தண்ணீர் பரிசோதனை செய்வது குறித்து அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு இருக்கிறது என குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.