கொரோனா தடுப்பூசி செலுத்தாவிட்டால் ஆசிரியர்கள் சம்பளம் இன்றி விடுமுறை எடுக்கலாம் என உத்தரவிடப்பட்டது.
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருப்பதால், அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும் தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கேரள மாநிலமான திருவனந்தபுரத்தில் அமைச்சர் சிவன்குட்டி நிருபர்களிடம் கூறியதாவது “5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் இருந்தனர். இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஆலோசிக்கப்பட்டது. இதனால் தடுப்பூசி செலுத்தும் ஆசிரியர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. இதனையடுத்து நேற்று வரை உள்ள கணக்கின்படி 1707 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தவில்லை. இதில் 1066 நபர்கள் உயர்நிலை பள்ளி ஆசிரியர்களாக இருக்கின்றனர். மலப்புரம் மாவட்டத்தில் 201 நபர்கள் தடுப்பூசி செலுத்தவில்லை.
இதனிடையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தடுப்பூசி போடாததை அறிந்த பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே குழந்தைகளின் நலன் கருதி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்த உத்தரவிடப்பட்டது. இதில் உடல் பிரச்னையுள்ள ஆசிரியர்கள், பணியாளர்கள் அதற்கான மருத்துவ சான்றிதழை ஆஜர்படுத்த வேண்டும். அதன்பின் தடுப்பூசி செலுத்தாவிட்டால் வாரந்தோறும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்த வேண்டும். மேலும் சம்பளம் இல்லாமல் அவர்கள் விடுமுறை எடுத்து கொள்ளலாம்.