இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு போடப்பட்டது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் 24 நாடுகளில் பரவியுள்ளது. மேலும் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது.
இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஒமிக்ரான் அச்சத்தின் காரணமாக வருகின்ற 6 ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்று அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் ட்விட்டர் பதிவு போல் ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இதுகுறித்து அம்மாநில அரசு அளித்துள்ள விளக்கம், மாநிலத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று வரும் அனைத்து தகவல்களும் வதந்தி என்றும் மர்ம நபர்கள் முதல்வர் ட்வீட் போல் எடிட் செய்து உள்ளனர். மேலும் அந்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.