மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் லோகநாதனை போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆர்.என்.புதூர் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்தியூர் வனத்துறை அலுவலகம் அருகே உள்ள தனியார் பயிற்சி கல்வி நிலையத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இதனால் லோகநாதன் தனது குடும்பத்துடன் அந்தியூரில் தங்கியுள்ளார். இதனிடையில் அந்தியூர் பகுதியை சேர்ந்த 10-ஆம் வகுப்பில் தோல்வியுற்ற மாணவி லோகநாதனிடம் கல்வி பயின்று வந்தார்.
இந்நிலையில் வழக்கம்போல் தனியார் பயிற்சி கல்வி நிலையத்துக்கு வீட்டில் இருந்து புறப்பட்ட மாணவி திடீரென மயங்கி விழுந்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதனை கேட்டதும் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது மாணவியை ஆசிரியரான லோகநாதன் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதன்பின் மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் லோகநாதனை போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு மனைவி மற்றும் ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர்.